ஹார்முஸ் நீர்சந்தி "முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக" ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அறிவித்திருந்த நிலையில், தற்போது ஈரானின் புரட்சிகர காவல்படை புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் ஈரானிய அரசுக்குள்ளேயே முரண்பாடுகள் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈரானிய காவல்படை வெளியிட்டுள்ள "புதிய உத்தரவின்படி", ஹார்முஸ் நீர்சந்தியை கடக்கும் அனைத்து வணிக கப்பல்களும் காவல்படையின் முன் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சிவிலியன் கப்பல்கள் ஈரான் நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், போர்க்கப்பல்கள் செல்வதற்கான தடை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் இந்த நீர்சந்தி முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக கூறியதை ஈரானிய அரசு ஊடகங்கள் விமர்சித்திருந்தன. குறிப்பாக, தஸ்னிம் ஊடகம் அவரது அறிவிப்பை "குறைபாடானது" என்று குறிப்பிட்டது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீர்சந்தி திறக்கப்பட்டதை வரவேற்றுள்ள போதிலும், ஈரானுடனான ஒட்டுமொத்த ஒப்பந்தம் முடியும் வரை அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இனி ஒருபோதும் இந்த நீர்சந்தியை ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு பின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.
Edited by Siva