மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், சொத்துத் தகராறு காரணமாகச் சொந்தத் தம்பியையே அண்ணன் 9 துண்டுகளாக வெட்டி, வீட்டின் பின்புறம் உள்ள மலக்கழிவுத் தொட்டியில் (Septic Tank) வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆஷிஷ் சாஹு என்ற இளைஞருக்கும், அவரது அண்ணன் கன்ஷியாம் சாஹுவுக்கும் இடையே டிராக்டர் வாங்கியது மற்றும் குடும்பச் சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த ஆத்திரத்தில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி ஆஷிஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கன்ஷியாம் கோடரியால் அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், ஒரு கசாப்புக் கடைக்காரரைப் போலச் சடலத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிச் சாக்கு மூட்டைகளில் கட்டித் தொட்டிக்குள் வீசியுள்ளார்.
சுமார் 6 நாட்களாக எதுவுமே நடக்காதது போல அதே வீட்டில் கன்ஷியாம் தங்கியிருந்த நிலையில், தொட்டியிலிருந்து வீசிய தாங்க முடியாத துர்நாற்றத்தால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆஷிஷின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
விசாரணையில், கன்ஷியாம் தனது தம்பியைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், இவர்களது தாயாரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதால், கன்ஷியாம் அவரையும் கொன்று புதைத்திருக்கலாமோ என்ற அதிரடி கோணத்தில் போலீசார் தற்போது தோண்டி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்திற்குள்ளேயே நிகழ்ந்த இந்தத் துண்டுக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேசத்தையும் உலுக்கியுள்ளது.