என் மகனுக்கும் 14 வயசு தான் ஆகுது…! ஒருவேளை கனவு கண்டேன்னு நினைச்சு கூகுளில் தேடினேன்… இந்திய கிரிக்கெட் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் வைபவ்… லலித் மோடி புகழாரம்..!!
SeithiSolai Tamil April 18, 2026 01:48 PM

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உருவெடுப்பார் என்று ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத் திறன் குறித்து விரிவாகப் பேசினார்.

நடப்பு ஐபிஎல் 2026 பருவத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தில் வைபவ் முக்கியப் பங்காற்றி வருகிறார். குறிப்பாக அணியின் நான்கு வெற்றிகளில் இவரது பங்கு மகத்தானது. இதுவரை 2 அரைசதங்களுடன் 263.16 என்ற அசுர வேக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து வருகிறார். கடந்த ஆண்டு சஞ்சு சாம்சன் காயமடைந்தபோது, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 14 ஆண்டுகள் 23 நாட்கள் மட்டுமே. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய மிக இளைய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

வைபவ் குறித்து லலித் மோடி கூறுகையில், இந்தச் சிறுவனைப் பாருங்கள். இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முகம் இவன்தான் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். எனது மகனுக்கும் 14 வயதுதான் ஆகிறது. ஆனால், இந்த வயதில் வைபவ் காட்டும் தன்னம்பிக்கையும் ஆட்டமும் பிரமிக்க வைக்கிறது. ‘இந்தச் சிறுவன் எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறான்? இது சாத்தியம்தானா அல்லது நான் கனவு காண்கிறேனா?’ என்று வியந்து கூகுளில் தேடிப் பார்த்தேன். அனைவரையும் விட அவர் ஒரு படி மேலேயே இருக்கிறார்,” என நெகிழ்ந்தார்.

இளம் வயதிலேயே கிடைக்கும் அதீத புகழும் பணமும் பல வீரர்களைத் திசைதிருப்ப வாய்ப்புள்ளதாக லலித் மோடி எச்சரித்துள்ளார். திடீரென கிடைக்கும் வெளிச்சம் சிலரைத் தடுமாறச் செய்யும், சிலரை ஜாம்பவான்களாக மாற்றும். வைபவ் போன்ற அபூர்வ திறமைகளைச் சரியாகக் கையாள்வதும், அவர்களைப் பாதுகாப்பதும் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

டி20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒருநாள் (ODI) போட்டிகள் தற்போது அர்த்தமற்றுப் போய்விட்டதாக மோடி தெரிவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தவிர மற்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிக்கும் தலைமுறை குறைந்து வருவதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாக்க கடுமையான முயற்சிகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த பருவத்தில் 7 போட்டிகளில் விளையாடிய வைபவ், 206.55 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 252 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அதிரடி ஆட்டம் தற்போதும் தொடர்வதால் கிரிக்கெட் உலகம் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.