இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா மற்றும் பாராலிம்பிக் தங்கம் வென்ற சுமித் அண்டில் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், பயிற்சியாளர் நாவல் சிங் மீது இந்திய விளையாட்டு ஆணையத்திடம் அதிரடி புகார் அளித்துள்ளனர். பயிற்சியாளர் நாவல் சிங் மது அருந்திவிட்டு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசி ஆடியோ பதிவுகளை அனுப்புவதாக வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு அதிகாரத்தில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான முறையில் நடந்துகொள்வதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், விளையாட்டுத் துறையில் கண்ணியமும் ஒழுக்கமும் அவசியம் என்றும் நீரஜ் சோப்ரா தனது கடிதத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அளிக்கப்பட்ட இந்தப் புகாரில், பயிற்சியாளர் நாவல் சிங் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது சமரசம் செய்ய முயன்றதாகவும், ஆனால் இம்முறை எக்காரணத்தைக் கொண்டும் இதை விடப்போவதில்லை என்றும் சுமித் அண்டில் கூறியுள்ளார்.
துரோணாச்சார்யா விருது பெற்ற ஒரு பயிற்சியாளர் மீது இத்தகைய பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் புகார்கள் எழுந்துள்ள விவகாரம் இந்திய விளையாட்டுத் துறையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.