ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி வியந்து பாராட்டியுள்ளார். மைக்கேல் வாகனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, “இந்தச் சிறுவன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். அவனது தன்னம்பிக்கையைப் பாருங்கள், 14 வயதில் இவ்வளவு அழகாக விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
என் மகனுக்கும் இப்போது 14 வயதுதான், ஆனால் வைபவ் ஆடுவதைப் பார்த்தால் இது சாத்தியமா? நான் கனவு காண்கிறேனா? என்று எனக்கே தோன்றியது. கூகுளில் கூட தேடிப் பார்த்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக இளம் வயதிலேயே புகழ் கிடைப்பதால் வைபவ் போன்ற திறமையான வீரர்களை கவனமாக கையாள வேண்டும் என்றும், இல்லையெனில் இந்தத் திடீர் புகழ் அவர்களை திசைமாற்றிவிடும் என்றும் லலித் மோடி எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்ட போது அணிக்குள் வந்த வைபவ், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அதிரடி ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து வரும் இவரை ‘இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்’ என்று லலித் மோடி புகழ்ந்து தள்ளியுள்ளார். இதே உரையாடலில், ஒருநாள் போட்டிகள் இனி அர்த்தமற்றவை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் அதிரடியாகப் பேசியுள்ளார்.