தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 06 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தலுக்காக ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.
அதன்படி இன்று பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 03 தொகுதிகளில் பரப்புரை செய்தார். ஆனால், கூட்டணியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் 06-ஆம் தேதி புதுச்சேரியில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்த அதே நாளில் முதல்வர் ஸ்டாலினும் அங்கு பிரச்சாரம் செய்தார். ஆனால், அப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக பரப்புரை செய்யவில்லை. ஒன்றாக சந்தித்துக்கொள்ளவும் இல்லை. அத்துடன், கூட்டணி ஒப்பந்தத்தை மீறி திமுகவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ராகுல்காந்தி சந்தித்தது பேசுபொருளாகியது.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று காலையில் பொன்னேரி கூட்டத்தில் 27 நிமிடங்கள் பேசியபோதும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெயரை சொல்லாமல் தவிர்த்தது பேசும் பொருளாகியுள்ளது. அடுத்த 02 கூட்டங்களில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியால் மு.க ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், இது திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் இணக்கமான சூழல் ஏற்படவில்லையா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.