அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடுவது தனக்கு துளியும் விருப்பமில்லாத ஒன்று என்று போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார். தற்போது 11 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ள அவர், அங்கு நிலவும் மோதல்களைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், கேமரூனில் இருந்து அங்கோலா செல்லும் வழியில் செய்தியாளர்களைச் சந்தித்த போப், தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி அல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். டிரம்பின் விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படாமல், அமைதியைப் போதிப்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக டிரம்ப் மற்றும் போப் லியோ இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. குறிப்பாக, தன்னை இயேசுவைப் போலச் சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தைப் பகிர்ந்து போப் லியோவை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த போப், வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைத் தவிர்த்துவிட்டு உலகத் தலைவர்கள் அமைதிக்காகப் பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். டிரம்புடன் விவாதம் செய்வது தனது நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ள அவர், போப்பினைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளை ஒரு தேவையற்ற திசைதிருப்பலாகவே கருதுகிறார்.