VOTER ID இல்லாமலும் வாக்களிக்கலாம்... இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று போதும்.. மறக்காம வாக்களியுங்க!
Dinamaalai April 23, 2026 09:48 AM

தேர்தல் திருவிழா களைக்கட்டத் தொடங்கி க்ளைமாக்ஸை நெருங்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு துவங்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை கவனத்துல வெச்சுக்கோங்க.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, அடையாள அட்டை கைவசம் இல்லாதவர்கள், தங்களின் அடையாளத்தை நிரூபிக்க ஆணையம் அங்கீகரித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தித் தாராளமாக வாக்களிக்கலாம். ஜனநாயகக் கடமையை ஆற்றும் ஒவ்வொரு வாக்காளரும் எவ்வித தடையுமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவே இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 12 ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன. மேலும், மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், பான் அட்டை, இந்தியக் கடவுச்சீட்டு மற்றும் ஓய்வூதிய ஆவணங்கள் ஆகியவற்றையும் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணி அட்டைகள் ஆகியவையும் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள், இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டைகளையும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் தகவல் சீட்டு என்பது ஒரு தகவல் வழிகாட்டி மட்டுமே தவிர, அதனை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது என்பதைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் தகுந்த அடையாள ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.