தமிழ்நாடு முழுவதும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு மே 2ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு சுமார் 1.7 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் இவை பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளரம் எனப்படும் சிங்கிள் விண்டோ மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
இந்த பொறியியல் கலந்தாய்வை டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு மூலம் ஜூலை மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரத்தில் கூறும்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. அவை வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 2ஆம் வாரம் முதல் தொடங்கும்.

விண்ணப்பம் பெறப்பட்டு ஜூன் மாதம் தரவரிசை பட்டியலை வெளியிட உள்ளோம். ஜூலையில் கலந்தாய்வை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூனில் வெளியிடப்படும்.
பொதுவாக சில ஆண்டுகளாக பொறியியல் சேர்க்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் ஏஐ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக, பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் சேர்க்கை அதிகரிக்கும்’’ என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ எனும் வலைத்தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.