தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!
ராகேஷ் தாரா May 06, 2026 05:14 PM

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான ஆர்.பி செளத்ரி உதய்பூரில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் படத்தை தயாரித்தார். அப்போது முதல் கடந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 100 படங்களை தமிழ் , மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தயாரித்துள்ளார். அவரது இறப்புக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

ஆடியோ மூலம் டி ராஜேந்தர் இரங்கல்

தமிழ் திரை உலகத்துக்குள்ளே தயாரிப்பாளராய் நுழைந்து, புது வசந்தம் படைத்தவர். தமிழ் திரை உலகுக்கு பல புதிய இயக்குனர்களை விதைத்தவர். புதிய அறிமுக இயக்குனருக்கு எல்லாம் அவர்தான் புகலிடம். அதனால் தான் தமிழ் திரை உலகம் அவரை அழைத்துச் சென்றது புகழிடம்.  படைத்த படங்களை பார்த்தால் புது வசந்தம் என்றும், பூவே உனக்காக என்றும், துள்ளாத மனமும் துள்ளும் என்றும், நாட்டாமை என்றும், பல படங்கள் தயாரித்தவர். அவர் தயாரித்த படம் தான் சூரியவம்சம். படத்தின் தயாரிப்பிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பார் நல்ல கதை அம்சம். தொண்ணூற்று ஒன்பதாவது (99) படமாக 'மகுடம் 'எடுத்துக் கொண்டிருக்கின்றார். இன்னும் ஒரு படம் எடுத்திருந்தால் நூறாவது படம் எடுத்து முடித்திருப்பார். ஏன் நூறாண்டு காலம் கூட வாழ்ந்து இருப்பார். ஆனால் கலை உலகில் அவர் மகுடம் சூடுவதற்கு முன்னால் , மரணம் வந்து அவரை சூடிக்கொண்டது ஏனோ. விபத்து என்ற பேரிலே விதி வந்து அவர் வாழ்விலே விளையாடியது ஏனோ. அவருடைய மறைவு மனதை வாட்டுகின்றது. அவரை இழந்து வாடக்கூடிய திரை உலகத்தினருக்கும், அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

இப்படிக்கு, 
தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், 
திரைப்பட விநியோகஸ்தர், 
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் 
டி.ராஜேந்தர்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.