தவெகவுடன் கூட்டணி.! தயவு செய்து திரும்ப வந்துடாதீங்க - காங்கிரசை பொளந்து கட்டும் திமுக
கு. அஜ்மல்கான் May 06, 2026 05:14 PM

தமிழகத்தில் தொங்கு சட்டசபை

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அடுத்தாக திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையான 118 தொகுதிகள் தேவையாக உள்ளது. இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் சந்திக்காமல் இருந்து  வந்தது.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க தவெக காய் நகர்த்தியது. அந்த வகையில் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியுள்ளது. அடுத்தாக தவெகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துள்ளது. அதில், இந்த கூட்டணி, பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தமிழ்நாட்டு பொற்காலத்தை மீண்டும் உருவாக்கவும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைகளையும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்பு மதிப்புகளையும் கடைபிடிக்க உறுதியளிக்கிறது.

ராஜ்யசபா சீட்- ராஜினாமா செய்ய தயாரா.?

இக்கூட்டணி அரசு அமைப்பதற்காக மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தல்களிலும் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதையடுத்து திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள் அந்த வகையில், திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் கூறுகையில்,கூட்டணியில் இருக்க பிடிக்கவில்லையென்றால் எப்போதே சென்று இருக்கலாமே, ராஜ்யசபா சீட்டை வாங்கி கொண்டுள்ளனர். திமுகவின் ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்துள்ளனர். இந்த சீட்டை திருப்பி கொடுப்பீர்களா.? ராஜினாமா செய்வீர்களா என கேள்வி எழுப்பினார். 

தயவு செய்து திரும்ப வந்துடாதீங்க

ஓட்டுப்போட்ட மக்களின் முதுகில் குத்தியுள்ளது காங்கிரஸ், 5 எம்எல்ஏக்கள் மூலம் எந்தவித பயனும் இல்லை. 2029ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கப்போகிறது.? என்பதை பார்ப்போம் என தெரிவித்தார். இதே போல திமுக முன்னாள் எம்பி செந்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடேங்கப்பா, கண்டிசன் எல்லாம் போடறாங்க.Please Don't come back- Relieved என பதிவிட்டுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.