‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
பிரகாஷ் September 01, 2026 03:44 PM

தமிழக சட்டப்பேரவை வரும் 8ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதன்பின்னர் தன்னுடைய அமைச்சரவை மாற்றியமைக்கவிருக்கிறார் முதல்வர் விஜய். சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியடைந்திருக்கும் முதல்வர் விஜய், அவர்களை அமைச்சரவையை விட்டே விடுவித்துவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் ஆலோசித்திருக்கிறார்.

மாற்றியமைக்கப்படவுள்ள துறைகள்

அதே நேரத்தில் அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்படவுள்ளன. குறிப்பாக, அமைச்சர் கீர்த்தனாவிடமிருக்கும் தொழில்துறை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கப்படவுள்ளது. உயர்கல்வித் துறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனிடமிருந்து பறிக்கப்படவிருக்கிறது. அமைச்சர் பிரபுவிடம் இருக்கும் கனிம வளத்துறைக்கு பதில் அவருக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யவிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீநாத்திடமிருந்து அந்த துறை மாற்றப்பட்டு, கைத்தறித்துறையும், கைத்தறி அமைச்சராக இருக்கும் விஜய் பாலாஜிக்கு மீன்வளத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேசத் தெரியாமல் பேசி சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபனிடமிருந்து முக்கியமான அந்த துறை பறிக்கப்பட்டு, அவருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்க்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

தொழில்துறை அமைச்சர் ஆகிறாரா ஆதவ் அர்ஜூனா ?

கீர்த்தனா பெரியத் துறையான தொழில்துறையை சமாளிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார். அவரால் அவ்வளவு பெரிய துறையை கையாள முடியவில்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டை கொண்டுவரும் துறையான தொழில்துறையை கையிலெடுக்க ஆதவ் அர்ஜூனா முடிவெடுத்திருப்பதாகவும், கீர்த்தனாவிற்கு மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

செங்கோட்டையன் வசமாகும் பள்ளிக் கல்வித்துறை ?

மேலும், வருவாய் துறை அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில், நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது பள்ளிக் கல்வித் துறை செங்கோட்டையன் வசமாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் ராஜ்மோகன் செய்தி விளம்பரம், தமிழ் வளர்ச்சி – பண்பாடு, திரைப்படத்துறை என பல்வேறு துறைகளை கவனிப்பதால் அவரிடமிருக்கும் பள்ளிக் கல்வித்துறை செங்கோட்டையன் வசம் செல்லவுள்ளதாக தெரிகிறது.  அதே நேரத்தில் ராஜ்மோகனுக்கு வேறு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் கில்லி சரத்குமார் மீது சட்டப்பேரவை வரை போதை பொருள் பயன்பாடு குறித்த புகாரையும் விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் வைத்துள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.