தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் சூரி. ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
‘மண்டாடி’ திரைப்படம் கடலோர மக்களின் வாழ்க்கை, அவர்களின் பாரம்பரியம் மற்றும் படகுப் போட்டியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. செப்டம்பர் 4ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து சூரி பகிர்ந்துகொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த காலத்தில், ஒரு படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் காயப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
" ஒரு படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார்கள். ஒரு பெரிய நகைச்சுவை நடிகருடன் எனக்கு சீன் இருந்தது. ஷாட் எடுத்துமுடித்தவுடன் இயக்குநரும் அந்த நடிகரும் சேர்ந்து மானிட்டர் பார்த்து அவர்களுக்குள்ளாக ஏதோ விவாதித்துக் கொண்டார்கள். பின் அந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரைத்த ஒருவரை எனக்கு பதிலாக நடிக்க வைத்தார்கள். நான் போட்டுவந்த சட்டையை கழற்றச்சொல்லி அந்த நடிகருக்கு கொடுத்தார்கள். அந்த சட்டை அவருக்கு சேராததால் அதனை காஸ்டியும் பிரிவினர் தூக்கி எங்கோ எறிந்துவிட்டார்கள். துண்டை வைத்து உடம்பை மறைத்துக்கொண்டு என்னுடைய சட்டையை நான் தேடிக்கொண்டிருந்தேன். அந்த நிலையில் நான் நடிக்க வேண்டிய காட்சியை இன்னொருவர் நடிப்பதை பார்ப்பது என்னை மிகவும் காயப்படுத்தியது " என சூரி கூறினார்.
ஆனால், அந்த அனுபவங்களை கடந்து தொடர்ந்து சினிமாவில் பயணித்ததே இன்று தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சூரி கூறியுள்ளார். ஆரம்பத்தில் தன்னை யாரும் பெரிதாக கவனிக்காத நிலையில், பின்னர் தனது நடிப்பை பாராட்டி வாழ்த்துகள் வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.