<மதுரையில் சிவகங்கை மாவட்ட கொலை வழக்கில் தொடர்புடையவ கைதி போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட்டம்.
சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழச்சேவல்பட்டி அருகே உள்ள காரையூர் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் என்ற 10-ம் வகுப்பு மாணவன் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதுடன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கண்மாய் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி, இலந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களில் அரவிந்த் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது, மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மாணவன் அஸ்வின் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு, சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று, இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக, அரவிந்தை மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்
பின்னர், ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்பிற்கு வந்த போலீசாரை திசை திருப்பி தள்ளிவிட்டுவிட்டு, அரவிந்த் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்த தகவல், மதுரை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதுபோல், சிவகங்கை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து சிவகங்கை போலீசார் மற்றும் மதுரை போலீசார் இணைந்த வழக்கில் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.