ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
நாகராஜ் September 02, 2026 06:44 PM

இந்திய அரசு வழங்கும் ஆவணங்களில் மிக மிக முக்கியமானது ஆதார் அடையாள அட்டை . சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய ஒவ்வொரு சேவைக்கும் முதன்மையான ஆவணமாக இந்த ஒரு கார்டைத் தான் கேட்பார்கள். எனவே ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், முகவரி தொலைபேசி எண், டேட் ஆஃப் பர்த் போன்ற அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். இந்த விவரங்களை எல்லாம் எத்தனை முறை மாற்றலாம் என்பதற்கு UIDAI ஒரு சில விதிகளை வகுத்துள்ளது.


ஆதார் கார்டில் பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம் என்பதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது. ஒரே ஒரு முறை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இரண்டாவது முறை பிறந்த தேதியை மாற்றும்போது கடுமையான பரிசீலனைக்கு பிறகு தான்  மாற்ற முடியும்.

சிலருடைய ஆதார் கார்டில் பிறந்த தேதியில் "Declared" அல்லது "Approximate" எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நேரம் ஆதார் மைய ஆபரேட்டர்கள் தவறாக உங்கள் பிறந்தத் தேதியை பதிவு செய்திருப்பார்கள். இது போன்ற காரணத்தின் போது நீங்கள் ஒரு முறை உங்கள் டேட் ஆஃப் பர்த்தை மாற்றிக் கொள்ளலாம். பிறந்த தேதியில் "Declared" அல்லது "Approximate" எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் பிறப்புச் சான்றிதழ் ஆவணத்தை வைத்து மாற்றலாம். 18 வயதிற்குட்பட்ட இந்தியராக இருந்தால் கட்டாயம் பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும்.

NRI-களாக இருந்தால் பிறப்புச் சான்றிதழ் அல்லது இந்திய பாஸ்போர்ட்டைச் சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே நீங்கள் உங்கள் பிறப்புச் சான்றிதழைக் கொடுத்து ஆதார் கார்டு வாங்கி இருக்கிறீர்கள் என்றால். பிறந்த தேதியை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. இதை செய்வதற்கு நீங்கள் புதிதாக பிறப்புச் சான்றிதழோடு ஒரு அஃபிடவிட் கொடுத்தால் மட்டுமே மாற்ற முடியும். அதுவே நீங்கள் பாஸ்போர்ட், மார்க்ஷீட் போன்றவற்றைக் கொடுத்து ஆதார் கார்டு வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அதே சான்றிதழில் உங்களுடைய டேட் ஆஃப் பர்த்தை மாற்றி கொடுக்கலாம் அல்லது பிறப்புச் சான்றிதழுடன் ஒரு அஃபிடவிட் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் கொடுத்த ஆவணத்தில் உங்கள் பிறந்த தேதி சரியாக இருக்கிறது. ஆனால் ஆதார் மையத்தில் உள்ள ஆப்ரேட்டர் அதைத் தவறாக பதிவு செய்து விட்டார் என்றால் அதை ஆபரேட்டர் செய்த தவறாகவே UIDAI கருத்தில் கொள்ளும். இந்த சூழ்நிலையில் நீங்கள் ஏற்கனவே வழங்கிய ஆவணத்தை கொண்டு ஆதார் கார்டில் மாற்றிக் கொள்ள முடியும்.


தவறான வழியில் பெறப்பட்ட ஆவணத்தை பயன்படுத்தி பிறந்த தேதியை பதிவு செய்திருந்தால் அதை சரி செய்வதற்கும் UIDAI ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் ஒரே ஒரு முறை மட்டும் பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் நீங்கள் ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது முதன் முதலில் உங்கள் உண்மையான வயதை விட குறைவாக பதிவு செய்திருக்கிறீர்கள் என்பது தெரிய வந்தால் அதை திருத்துவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படலாம். மேலும் அவர்களின் ஆதார் கார்டு முடக்கப்படவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தையை 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கான பிரிவில் பதிவு செய்திருந்தால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம். அதேபோல 18 வயதை கடந்த ஒருவர் சிறுவர் சிறுமியருக்கான பதிவில் ஆதார் கார்டு பெற்றிருந்தாலும் இதே நடவடிக்கை பொருந்தும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.