துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். வரும் செப்டம்பர் 3ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள ‘I Am Game’, துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும். Wayfarer Films சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அந்நிறுவனம் தயாரித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ஃபேண்டஸி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன் மற்றும் கேமிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் விழாவில் பேசிய நடிகர் கதிர், ‘I Am Game’ பல சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட வித்தியாசமான படமாக இருக்கும் என்றும், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளைத் தாண்டி ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதில் கிரிக்கெட் கேப்டன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், இதற்காக கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், தனது கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருந்ததால் கதை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு தனக்கு சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறினார். நடிகர் ஆண்டனி வர்கீஸ், தமிழில் நடைபெறும் தனது முதல் நிகழ்ச்சி இது என்றும், துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்துடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் தெரிவித்தார்.
இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர்.
‘I Am Game’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது. இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
விழாவில் பேசிய துல்கர் சல்மான், இப்படம் தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டார். மிஷ்கின், கதிர் உள்ளிட்டோரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். மேலும், சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இப்படம் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்றும், ஆண்டனி வர்கீஸ் படத்தின் முக்கிய பலங்களில் ஒருவராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே வெளியான டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள நிலையில், பிரம்மாண்டமான தயாரிப்பு, பல மொழிகளில் வெளியீடு மற்றும் முன்னணி நடிகர்களின் கூட்டணி ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 3ஆம் தேதி ‘I Am Game’ திரையரங்குகளில் வெளியாகிறது.