அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களும், மோதலும் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா நேற்று மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி இப்போது கிட்டத்தட்ட முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், தடைகள் மற்றும் தாக்குதல்களால் ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரக் கட்டாயப்படுத்த அவர் முயற்சிப்பதாகக் கூறிய ஏபிசி நியூஸ் செய்தியை ட்ரம்ப் நிராகரித்தார். ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு கட்டாயப்படுத்துவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரியில் மோதல் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், வாஷிங்டனின் இந்த கூற்றுகளை டெஹ்ரான் தொடர்ந்து நிராகரித்து, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே நீடிப்பதாக உறுதியாகக் கூறி வருகிறது.
அமெரிக்கா நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் பதிலடி கொடுத்தது. ஜோர்டானின் அகாபா அருகே உள்ள ஒரு ராணுவத் தளத்தில் இருந்த அமெரிக்க கடற்படை முகாமை, பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.