தவெக கூட்டணியில் இருப்பதால் நாங்கள் அடிமைகிடையாது - கொந்தளித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி
சிவரஞ்சித் September 02, 2026 08:44 PM

புதுச்சேரி: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்தவிதத்திலும் அனுமதி வழங்கக்கூடாது என்றும், தமிழக மற்றும் புதுச்சேரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி எல்லை அம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி கூறியதாவது: உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு அடிப்படையில், கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நீரை வழங்காமல் இடையூறு செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டினால், காவிரி நீர் முழுமையாக தமிழகத்திற்கு வருவது தடைபடும். இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. புதுச்சேரியிலும் மேகதாது அணை கட்டப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், தொடர்ந்து மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. கர்நாடக முதலமைச்சரும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டப்படுவதை காரைக்கால் விவசாயிகள் முழுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தமிழக மற்றும் புதுச்சேரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.

ராகுல் காந்தி மீது பொய் வழக்கு

பாஜக தலித் சமுதாயத்தை அவமதித்ததாக ராகுல் காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார். இது தலித் மக்களை மதிக்காததையும், அவர்களின் உரிமைகளை பறிக்கும் செயலையும் காட்டுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தபோதிலும், அதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

புதுச்சேரி பட்ஜெட்டில் ஒன்றுமில்லை

புதுச்சேரி பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் எந்த அறிவிப்பும் இல்லை. துணைநிலை ஆளுநர் ரூ.14,500 கோடிக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளார். ஆனால், பட்ஜெட் உரையில் குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

சிலிண்டர் மானியம் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டதைத் தவிர, முதலமைச்சர் ரங்கசாமியின் நிதிநிலை அறிக்கையில் வேறு எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சரும் அமைச்சர்களும் பிரதமரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே புதுச்சேரி முழுமையான வளர்ச்சியை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், விஜய் பிரதமராக வருவார் என தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நாராயணசாமி, அந்தந்த கட்சி நிர்வாகிகள் தங்கள் தலைவர்கள் பிரதமராக வேண்டும், ஆளுநராக வேண்டும் என கூறுவது வழக்கமான ஒன்றுதான் என்றார். 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் இருப்பார். தவெக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் இறுதியான முடிவு அல்ல. பிரதமர் வேட்பாளர் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள்தான் இறுதி முடிவு செய்வார்கள். விஜய், ராகுல் காந்தி பிரதமராக வருவதை ஏற்றுக்கொள்வார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். தமிழக அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம் என, காங்., அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்களின் எண்ணத்தின் வெளிபாடு. கூட்டணியில் இருப்பதால் நாங்கள் அடிமைகிடையாது' என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.