பிராண்ட் பெயர் என்பது எந்தவொரு தயாரிப்புக்கும் முக்கியமானது. பிரபலமான பிராண்டுகள் அவற்றின் பின்னால் கவர்ச்சிகரமான கதைகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் பிரபல கார் பிராண்டான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) எவ்வாறு பெயர் பெற்றது என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க வழக்கறிஞரும் தொழிலதிபருமான டேவிட் ரூபன்ஸ்டைனுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஇஓ ஸ்டென் ஓலா கலேனியஸ் அந்த நிறுவனத்தின் பிராண்ட் பெயர் எப்படி வந்தது என்பதை விளக்கியுள்ளார். 1886ஆம் ஆண்டு காட்லீப் டெய்ம்லரால் நிறுவப்பட்ட கார் நிறுவனத்திற்கு முதலில் டெய்ம்லர் என்று பெயரிடப்பட்டது என்று அவர் கூறினார். அப்போது டைம்லரின் தலைமைப் பொறியாளராக வில்ஹெல்ம் மேபேக் இருந்தார் என்றும் கூறினார்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரிய தொழிலதிபர் எமில் ஜெல்லினெக் பந்தயத்திற்காக ஒரு காரை வடிவமைக்க டெய்ம்லர் மற்றும் மேபேக்கை நியமித்தார். ஜெல்லினெக் பிரான்சின் நைஸில் ஒரு பந்தயத்தில் பங்கேற்பதற்காக இந்தக் காரைத் தயாரிக்கச் சொன்னார்.
டெய்ம்லர் மற்றும் மேபேக் இருவரும் ஜெல்லினெக்கின் விருப்பத்தை நிறைவேற்றினர். சக்திவாய்ந்த என்ஜின் கொண்ட வாகனத்தை அவருக்குக் கொடுத்தனர். ஜெல்லினெக் பந்தயத்தில் வெற்றிபெற்றதும் காருக்கு அவரது மகளான 'மெர்சிடிஸ்' பெயரை வைக்க வேண்டும் என்றார்.
இதனால், டெய்ம்லர் அந்தப் பெயரை தனது நிறுவனத்தின் பெயரில் சேர்த்துக்கொண்டார். உலகளவில் பிரபலமான கார் பிராண்டான 'மெர்சிடிஸ்-பென்ஸ்' இப்படித்தான் உருவானது.
'மெர்சிடிஸ்-பென்ஸ்' இணையதளத்தின்படி, ஜூன் 23, 1902 இல் 'மெர்சிடிஸ்' ஒரு பிராண்ட் பெயராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி அது சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றது.
ஜூன் 1903 இல், எமில் ஜெல்லினெக் தனது பெயரை ஜெல்லினெக்-மெர்சிடிஸ் என்று மாற்றிக்கொண்டார். "ஒரு தந்தை தனது மகளின் பெயரை வைத்திருப்பது இதுவே முதல் முறை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
1907இல் ஜெல்லினெக் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய தூதராக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு மெக்சிகன் தூதராக நியமிக்கப்பட்டார். 1909ஆம் ஆண்டில், ஜெல்லினெக் வாகனத் தொழிலில் இருந்து விலகி, மொனாக்கோவில் உள்ள ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய துணைத் தூதரகத்தின் தலைவராகப் பணியில் சேர்ந்தார். ஜனவரி 21, 1918 இல் இறக்கும் வரை எமில் ஜெல்லினெக் கார்கள் மீது மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார்.