சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நாளை நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
அரசு கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டி: மாணவர் தரவரிசை பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட் டது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பிரிவில் 28,819 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பிரிவில் 3,683 பேர், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் 13,417 பேர் இடம்பெற்றுள்ளனர். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ள நிலையில் தரவரிசை பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம்பெற்று உள்ளனர். இதன்மூலம் ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர்.