இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..! ரூ. 2000 மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி?
Newstm Tamil September 09, 2024 03:48 PM

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்ததால் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, போன் பே, ஜி பே மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று 9-ம் தேதி நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. இதனை அடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இதனால் தான் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் யுபிஐ மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது கணிசமான அளவு அதிகரித்துள்ளது .அப்போது அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 2000 ரூபாய்க்கும் கீழ் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான சேவை வரியை நீக்கியது. எனவே பெரும்பாலான மக்கள் இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறினார். இந்த சேவை வரி நீக்கம் என்பது 2016-ஆம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது.

அப்போது ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இல்லை. 2017 ஆம் ஆண்டில் தான் ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வந்தது. இந்த நிலையில் வருகின்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000க்கும் கீழ் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு பேமென்ட் அக்ரிகேட்டர் கட்டணமாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. பேமென்ட் அக்ரிகேட்டர் என்பவை வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சுமூகமாக்க செயல்படும் நிறுவனங்கள் ஆகும். ரேசர்பே, அமேசான் பே உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். பொதுவாகவே இது போன்ற பேமென்ட் கேட்வே தளங்கள் வியாபாரிகளிடம் இருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை கட்டணமாக பெறுகின்றன. இந்த கட்டணத்தின் மீது புதிய ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

பேமென்ட் கேட்வே நிறுவனங்கள் இந்த வரித்தொகையை வியாபாரிகள் மீது தான் சுமத்தும் என சொல்லப்படுகிறது. ஒரு வேலை இந்த வரி நடைமுறைக்கு வந்தால் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக குறைந்த மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக தற்போது 1000 ரூபாய்க்கு ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது தற்போது இருக்கக்கூடிய அமைப்பின்படி 1 சதவீதம் பேமென்ட் கேட்வே கட்டணமாக வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. அதாவது 1000 ரூபாய் பரிவர்த்தனைக்கு 10 ரூபாயை வியாபாரிகள் பேமண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இந்த புதிய ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு வந்தால் இந்த கட்டணம் 10 ரூபாயில் இருந்து 11. 80 ரூபாயாக உயரும்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.