அரசுப் பள்ளிகள் மேம்பாடு: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப்பள்ளி’ திட்டத்துக்கு எஸ்பிஐ ரூ.1.37 கோடி நிதி உதவி!
மாய நிலா September 15, 2024 05:14 PM

அரசுப்  பள்ளிகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

சமூக பங்களிப்பு நிதிகளுடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் உயரிய நோக்கில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி’ எனும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 19 டிசம்பர், 2022இல்  தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்டங்களில் அமைந்துள்ள மொத்தம் 30 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பாரத ஸ்டேட் வங்கி ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

இதற்கான காசோலையை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்  மாநில ஒருங்கிணைப்பாளர் காயத்ரியிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வினய் தான்சே வழங்கினார்.

30 அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள்

இந்த நிதியின் வாயிலாக 23 மாவட்டங்களில் உள்ள 30 அரசுப் பள்ளிகளில் கணினிகள், மேஜைகள், இருக்கைகள் வசதி, ஆர்.ஓ குடிநீர் வசதி, சூரிய ஒளி மின்கலன்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது ஒரு தொடக்கப் புள்ளியே

இது தொடர்பாக வினய் எம் தான்சே  கூறும்போது, “நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளியின் வாயிலாக சமூக நலன் கருதி மாணவர்களின் வளர்ச்சிக்காக பங்களிப்பதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இது ஒரு தொடக்கப் புள்ளியே. தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பங்களிப்போம்” எனத் தெரிவித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.