”பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்” கூட்டணி பற்றி முடிவு..?
இராஜா சண்முகசுந்தரம் September 16, 2024 02:14 PM

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அறிவாலயம் சென்று சந்தித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அக்டோபர் 2ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

ஆட்சி அதிகாரத்தில் பங்கு - திருமா

அதோடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் சமீபத்தில் பேசிய வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இந்த கருத்து குறித்தும் திமுகவினர் இடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், நேற்று திருவாரூரில் பேசிய திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டால் கூட்டணியில் ஏதேனும் சிக்கல் வந்தாலும் அதனையும் எதிர்க்கொள்ள தயார் என கூறியிருந்தார். இப்படியான நிலையில், விசிகவின் மாநாட்டிற்கு பாமக தலைவர் அன்புமணியும் ஆதரவு தெரிவித்திருந்தார் 

முதல்வருடன் சந்திப்பு - சர்சைக்களுக்கு முற்றுப்புள்ளியா?

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பியுள்ள திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்து பேசியுள்ளார் திருமாவளவன். அவரோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றுள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு மீண்டும் கூட்டணியில் சுமூகமான நிலை திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

சந்திப்புக்கு பிறகு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து முதல்வருடன் என்ன பேசினார் என்பதை திருமாவளவன் தெரிவிக்கவுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.