பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து | ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம்!
Dinamaalai September 17, 2024 12:48 AM

பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் கைகாட்டியும் அரசு பஸ் நிற்காமல் சென்ற விவகாரத்தில், அரசு பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் வடசேரியில் இருந்து சுசீந்திரம், அழகப்பபுரம் வழியாக நெல்லை மாவட்டம் கூட்டப்புளிக்கு கடந்த 13ம் தேதி மாலையில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து  அழகப்பபுரம் சென்றபோது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டினர். ஆனால் பேருந்து நிற்கவில்லை.


 

இதைப் பார்த்த சில வாலிபர்கள் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் பேருந்தில் இருந்த ஓட்டுநரிடமும், நடத்துனரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேருந்தின் ஓட்டுநர் தெரியாமல் தவறு செய்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ஓட்டுநர் அங்கிருந்து பேருந்தை ஓட்டி சென்றார். தற்போது பேருந்தின் ஓட்டுநரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பெண்கள் கைகாட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.