மது ஒழிப்பு மாநாட்டால் கூட்டணி உடைந்தாலும் கவலையில்லை! - ஓப்பனாக சொன்ன திருமாவளவன்!
Webdunia Tamil September 17, 2024 12:48 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான கருத்துகள் நிலவும் நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், அதன் கூட்டணியில் உள்ள வி.சி.க மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்ததால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்சியினரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பாமக பல காலமாக மது ஒழிப்புக்கு போராடி வருவதாகவும், மது ஒழிப்பில் பா.ம.க பிஹெச்டி என்றால், விசிக எல்கேஜி என விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசியுள்ள திருமாவளவன் “நாங்கள் எல்கேஜிதான். பாமக பிஹெச்டிதான். இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போதும் திமுக கூட்டணியில்தான் உள்ளது. மதுவிலக்கு என்பது அனைவருக்குமான பிரச்சினை. மது ஒழிப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்துள்ளோம். பங்கேற்பதும், நிராகரிப்பதும் அவரவர் விருப்பம்.

பல கசப்பான அனுபவங்களால் பாமகவினருடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. அவர்கள்தான் இந்த நிலைக்கு தள்ளினர். பாமகவை இழிவுப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. மது ஒழிப்பு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. எங்கள் நோக்கம் களங்கமற்றது.

மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதிகாரத்தில் பங்கு என்ற பதிவை திமுக மிரட்டியதால் நீக்கியதாக கூறினார்கள், இப்போதும் திமுக கூட்டணியில் உள்ளதாகவே நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.