MPox: கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி; துபாயிலிருந்து வந்தவருக்குச் சிகிச்சை! | Monkey Pox
Vikatan September 19, 2024 09:48 PM

எம்பாக்ஸ் (MPox)- குரங்கம்மை தொற்று முதன் முதலில் காங்கோ நாட்டில் பரவியது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா மட்டுமன்றி அதைத் தாண்டியும் இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்திருந்தார். இந்த நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

குரங்கம்மை வைரஸ்

இந்த நிலையில், இந்தியாவில் இரண்டாவது வழக்காக, கேரள மாநிலத்தில் முதல் வழக்காக ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பாக கேரள அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``செப்டம்பர் 13-ம் தேதி துபாயிலிருந்து திரும்பிய, மலப்புரத்தில் உள்ள எடவண்ணாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு, குரங்கம்மை இருப்பது உறுதியாகியிருக்கிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த நபர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாரிகள் அவரது மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி கோழிக்கோடு MCH-ல் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அவரின் குடும்பத்தினர், அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள், அவர் வந்த பிறகு அவருடன் பயணம் செய்தவர்கள் தொடர்பு பட்டியலில் உள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கவும், நோய் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்பு பட்டியலில் உள்ள யாருக்கும் தற்போதுவரை எந்த அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இது தொடர்பாக மருத்துவர்கள், ``பாதிக்கப்பட்டவர் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கிறது. காய்ச்சலும், அவரது கைகள் மற்றும் அவரது உடலின் வேறு சில பகுதிகளில் mpox குணமாகி வருகிறது. அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவருடன் பேச வேண்டும். அவர் குணமடைந்த பிறகு அந்த உரையாடலை நடத்துவோம். இந்த நோய்த் தொற்று, அணில், எலிகள், பல்வேறு வகையான குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உடல், பாதிக்கப்பட்ட விலங்குகளின் காயங்களுடன் நேரடி தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

காடுகளை ஒட்டியோ அல்லது அதற்கு அருகில் வசிப்பவர்களோ, பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொண்டால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது, வைரஸைக் கொண்ட சிறிய துளிகள் மூலமும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும். இந்த நீர்த்துளிகளை மற்றொரு நபர் சுவாசித்தால் அல்லது அவற்றைத் தொட்டால் அவர்களுக்கு தொற்று ஏற்படலாம். சொறி, அதிக காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசை வலி, இருமல், தொண்டை புண், நிணநீர் கணுக்கள், கொப்பளங்கள் மற்றும் சிவப்பு புள்ளிகள் தொடர்ந்து உடலில் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும்." என எச்சரித்திருக்கின்றனர்.

Taapsee Pannu: ``அவரை முதன் முதலில்..!" - காதலனை சந்தித்தது குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.