அக்.27ம் தேதி தவெக மாநாடு... நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Dinamaalai September 20, 2024 05:48 PM

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தவர் கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார். இதில் இடம்பெற்றிருக்கும் யானை சின்னமும், வாகை மலரும் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. இதற்கெல்லாம் முதல் மாநாட்டில் விஜய் பதில் கொடுப்பார் எனவும் அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த மாதம் நடக்க இருப்பதாக இருந்த தவெக முதல் மாநாடு இடத்திற்கு அனுமதி மற்றும் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை காரணமாக தள்ளிப் போனது. இப்போது அடுத்த மாதம் தேதி குறித்திருக்கிறார் விஜய்.

இதுதொடர்பாக தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடன் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது நமது முதல் மாநாடு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். 

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றி கழகத்தை முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்க உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. விரைவில் வெற்றி வாகை சூடுவோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.