Madras University: ஊதிய நிலுவை, துணை வேந்தர், ஆசிரியர்கள் நியமனம்: சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 16 கோரிக்கைகள்!
மாய நிலா September 20, 2024 07:44 PM

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். நியமிக்கப்படாமல் உள்ள துணை வேந்தர், ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை சென்னைப்‌ பல்கலைக்கழக ஆசிரியர்‌ மற்றும்‌ அலுவலர்‌ சங்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்குழு முன்வைத்துள்ளது.

இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்து உள்ளதாவது:

1.சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 2014ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நியமிக்கப்பட்ட 22 பேராசிரியர்களின்‌ நியமனத்தை விசாரிப்பதற்கு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்‌. இவ்வழக்கில்‌ தொடர்புடைய பேராசிரியர்கள்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ முக்கிய பொறுப்புகளில்‌ இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும்‌.

2.சென்னைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ கடந்த ஒரு வருடமாக துணைவேந்தர்‌ நியமிக்கப்படாமல்‌ உள்ளதால்‌, பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்‌.

3.ஏழாவது ஊதியக்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ ஆறு வருடங்களாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல்‌ உள்ள ஊதிய நிலுவைத்‌ தொகையை உடனடியாக வழங்க வேண்டும்‌.

4.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்‌போது நிதிக் குழுவின்‌ ஒப்புதலை பெற வேண்டும்‌ என்ற புதிய நடைமுறையை புகுத்தி பதவி உயர்வுகளை வழங்குவதில்‌ தேவையற்ற காலதாமதத்தை பல்கலைக்கழகம்‌ மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை மமேற்கொள்ள வேண்டும்‌.

ஏற்கனவே பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய நிலுவைத்‌ தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்‌.

5.ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 2018லிருந்து பணிநிறைவு பணப்பலன்கள்‌ வழங்கப்‌படவில்லை. பண பலன்கள்‌ கிடைக்கப்‌ பெறாமல்‌ கடந்த சில ஆண்டுகளில்‌ பல ஆசிரியரல்லாத 37 ஊழியர்கள்‌ ஓய்வு பெற்ற பின்பு இறந்து விட்டார்கள்‌. ஆகவே ஓய்வு ஊதிய நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்‌.

6.பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்‌ தொகையை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

7.கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர்களுடைய பணிநியமனங்கள்‌ நியமிக்கப்படாமல்‌ காலம்‌ தாழ்த்தப்படுகின்றன. குறிப்பாக மொத்தம்‌ 540 ஆசிரியர்கள்‌ பணியாற்ற வேண்டிய இடத்தில்‌, தற்பொழுது 193 ஆசிரியர்களே பணியில்‌ உள்ளனர்‌. தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்‌.

8.கடந்த பத்து ஆண்டுகளாக நிர்வாகம்‌ மற்றும்‌ தொழில்நுட்ப அலுவலர்கள்‌ பணி நியமனங்கள்‌ நியமிக்கப்படாமல்‌ காலம்‌ தாழ்த்தப்படுகின்றன. குறிப்பாக மொத்தம்‌ 1,417 நிர்வாக மற்றும்‌ தொழில்நுட்ப அலுவலர்கள்‌ பணியாற்ற வேண்டிய இடத்தில்‌, தற்பொழுது 463 அலுவலர்களே பணியில்‌ உள்ளனர்‌. ஆகையால்‌ தகுதியான பணியாளர்களை உடனடியாக நியமனம்‌ செய்ய வேண்டும்‌.

9.தொழில்நுட்ப அலுவலர்களின்‌ பணிவரன்‌ முறை குழுவின்‌ பரிந்துரையின்‌அடிப்படையில்‌ வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

10.ஏப்ரல்‌ 2022க்குப் பின்‌ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறாத காரணத்தினால்‌ சான்றிதழ்‌ வழங்கப்படவில்லை. இதனால்‌ மாணவர்களின்‌ நலன்‌ பெருமளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்‌ கல்விக்கான அடிப்படை வசதிகளும்‌ பெருமளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளன.

11.கெளரவ விரிவுரையாளர்களுக்கு பணி ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்‌.

12.துப்புரவுப்‌ பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்‌.

13.தொலைதூரக்கல்வி நிறுவனத்தில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும்‌.

14.தமிழக அரசு சென்னைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மானியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்‌.

15.நிர்வாகத்தில்‌ முக்கியம்‌ வாய்ந்த துணைவேந்தர்‌ அலுவலகம்‌/ பதிவாளர்‌ அலுவலகம்‌/ தேர்வாணையர்‌ அலுவலகத்தில்‌ பெண்கள்‌, பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின அலுவலர்களின்‌ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்‌.

16.மூத்த துணைப்‌ பதிவாளர்‌ பதவியை உடனடியாக நிரப்பிட வேண்டும்‌.

இவ்வாறு சென்னைப்‌ பல்கலைக்கழக ஆசிரியர்‌ மற்றும்‌ அலுவலர்‌ சங்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தி உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.