Israel vs Hezbollah: 42 ஆண்டுகால பகை பெரும் போராக வெடிக்குமா? அ முதல் ஃ வரை முழுமையான தகவல்கள்!
Vikatan September 21, 2024 07:48 PM

"உலகில் எந்த நாடும் எதிர்கொள்ளாத பாதுகாப்பு அச்சுறுத்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இஸ்ரேல் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. இது போருக்கான பிரகடனம்" எனப் பேசியுள்ளார் ஹிஸ்பொல்லா தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லாஹ்.

ஹிஸ்பொல்லா வீரர்களின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள், வீடுகளில் உள்ள சோலார் கருவிகள், கையடக்க ரேடியோக்கள் மற்றும் லேண்ட் லைன் ஃபோன்களும் கடந்த இரண்டு தினங்களில் வெடித்தன.

இதனால் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்ததுடன் 2 குழந்தைகள் உட்பட 37 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதல் நடத்தும் விதமாக இஸ்ரேல் எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது ஹிஸ்பொல்லா. பதிலடியாக, இன்று காலையில் ஹிஸ்பொல்லா ராணுவத் தளங்களைத் தாக்கியது இஸ்ரேல்.

ஹிஸ்பொல்லா தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லாஹ்

கடந்த 11 மாதங்களாக தெற்கு லெபனானில் நடக்கும் மோதல், இரண்டு தரப்புக்கும் இடையே பெரிய அளவிலான போராக வெடிக்க அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன.

இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ஹிஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேலுக்குமான மோதல் இன்று நேற்றுத் தொடங்கியது அல்ல. அது 40 ஆண்டுக்கால பகை. மத்திய கிழக்கில் தீராத சண்டையின் வரலாற்றைச் சுருக்கமாகப் புரட்டிப்பார்க்கலாம்.

ஹிஸ்பொல்லா தொடக்கம்:

இஸ்ரேல் என்ற நாடு 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை அதன் அண்டைய நாடுகளுடன் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு வருகிறது.

1948 அரபு நாடுகளுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டபோது, அரபு பகுதியில் சிறிய இராணுவத்தை வைத்திருந்த லெபனானின் தெற்கு பகுதியை ஆக்கிரமித்தது. போர் நிறுத்த அறிவிப்பு வரும்வரை அந்த பகுதி இஸ்ரேலின் பிடியில் இருந்தது.

அதன் பிறகு லெபனான், பாலஸ்தீனிய விடுதலை அமைப்புக்கு (PLO) ஆதரவு வழங்கியது. PLO - இஸ்ரேல் இடையிலான மோதல்களில் லெபனான் பெரிய அளவில் ஈடுபடாவிட்டாலும் அதன் பாதிப்புகளை ஏற்றது. பல லட்சம் பாலஸ்தீனிய அகதிகள் லெபனானில் தங்கினர்.

Gaza war ``பேஜர், வாக்கி டாக்கி, சோலார்... ஒரே நேரத்தில் பல இடங்களில் வெடிப்பு!" - லெபனானில் நடப்பது என்ன?!

அரபு நாடான லெபனானில் 1950-களில் கிறிஸ்தவர்களே அதிகம் இருந்தனர். இன்று, 60% இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இருக்கிறது லெபனான். இதில் கணிசமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் 1978-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன்முதலாக லெபனானை ஆக்கிரமித்து லிட்டானி நதி வரை முன்னேறியது. அப்போது ஐ.நா தலையிட்டு இஸ்ரேலிய படைகளை வெளியேற உத்தரவிட்டது. அத்துடன், ஐ.நா இடைக்காலப் படையையும் லெபனான் எல்லையில் (UNIFIL) நிறுவியது.

லெபனானில் பாலஸ்தீனிய இஸ்லாமியர்களுக்கும் லெபனான் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இஸ்ரேல் கிறிஸ்தவர்களின் படைக்கும், சிரியா பாலஸ்தீனியர்கள் படைக்கும் நிதி, ஆயுத உதவி வழங்கின.

உள்நாட்டுப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, 1982ம் ஆண்டு லெபனானில் PLO-வை எதிர்ப்பதாகக் கூறி உள்நுழைந்தது இஸ்ரேல் படை.

இந்தப் படையெடுப்பின் விளைவாகப் பன்னாட்டு அமைதி காக்கும் படையின் மேற்பார்வையில் பாலிஸ்தீனிய விடுதலைப் படை லெபனானை விட்டு வெளியேறியது. ஆனால் இஸ்ரேல் படைகள் லெபனானில் தங்கின.

அந்தநேரம், லெபனான் படைகளின் (LF) தலைவரும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பஷீர் கெமாயெல் 'சிரிய சமூக தேசியவாதக் கட்சியின்' உறுப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் உதவியுடன் LF தலைவரான எலி ஹோபேக்கா வலதுசாரி கிறிஸ்தவ படையைத் திரட்டி பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டார். இதில் 2,500 முதல் 3000 பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் சியா முஸ்லீம்கள் மரணித்தனர்.

Sabra and Shatila massacre லெபனானை அதிரவைத்த பேஜர், வாக்கிடாக்கி அட்டாக் - இது எந்த மாதிரி டெக்னாலஜி?

இந்த சம்பவம் வரலாற்றில் Sabra and Shatila massacre என்றழைக்கப்படுகிறது.

இந்த கொடிய தாக்குதல்களை முறியடிக்கப் பல இஸ்லாமிய அமைப்புகள் லெபனானில் தோன்றின. பாலஸ்தீனிய மக்களின் பாதுகாப்புக்கு பணியாற்றுவதாக ஈரான் தலையிட்டது.

ஈரான் உதவியுடன் லெபனான் இஸ்லாமியத் தலைவர்கள் ஹிஸ்பொல்லா அமைப்பைத் தோற்றுவித்தனர்.

வலதுசாரி லெபனான் படையின் தாக்குதல்களால் அதிருப்தியடைந்த இளைஞர்கள், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், ஷியா சமூக மக்கள் ஹிஸ்பொல்லாவிற்கு ஆதரவு தந்ததால் லெபனானில் ஹிஸ்பொல்லா குறிப்பிடத்தக்க சக்தியாக வளர்ந்தது.

ஹிஸ்பொல்லாவின் வளர்ச்சி

1980-களின் தொடக்கத்தில் பல்வேறு அமைப்புகள் லெபனானில் இருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்தின. பல சிறிய குழுக்கள் ஹிஸ்பொல்லாவுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்க்கத் தொடங்கின.

படிப்படியாக ஹிஸ்பொல்லா வளர்ந்து 1985-ல் இஸ்ரேலை தெற்கு லெபனான் வரை பின்னுக்குத் தள்ளியது. தெற்கு லெபனான் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக இருந்ததால் அந்த இடத்தை பாதுகாப்பு எல்லையாக அறிவித்தது இஸ்ரேல்.

லெபனான் உள்நாட்டுப் போர் சிரியா - இஸ்ரேல் மோதலாக உருவெடுத்து இறுதியில் சிரியா வென்றது. இதனால் ஹிஸ்பொல்லாவுக்கு ஆதரவு அதிகரித்தது.

iran and hezbollah march Lebanon: பேஜர் வெடிப்பில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் மீண்டும் வெடிப்பு - லெபனானில் பதற்றம்!

உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1992ல் அரசியலில் ஈடுபடத் தொடங்கியது ஹிஸ்பொல்லா. முதல் தேர்தலில் 128 தொகுதிகளில் 8 தொகுதிகள் மட்டுமே வென்ற ஹிஸ்பொல்லா, இன்று கூட்டணியுடன் 62 தொகுதிகளை வென்றுள்ளது.

ஹிஸ்பொல்லா மெதுவாகப் பிற மத குடிமக்களின் ஆதரவையும் பெறத் தொடங்கியது. 2000-ம் ஆண்டு ஐ.நா தலையீட்டுக்குப் பிறகு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முழுமையாக வெளியேறியது.

2009-ம் ஆண்டு ஹிஸ்பொல்லாவின் கொள்கை விளக்க அறிவிப்பு, குறுங்குழுவாத நலன்களைக் காட்டிலும் தேசிய ஒற்றுமையைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒரு ஜனநாயக வடிவ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புக்குப் பங்களிக்கவும் உறுதியளித்தது.

காசா போர்

இஸ்ரேல் காசாவில் ஊடுருவுவதை எதிர்த்து ஹிஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் அமைப்பு லெபனான் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தவும் உதவி வருகிறது.

இந்த போரின் விளைவாக லெபனான் எல்லையில் 133 பொதுமக்கள் உட்பட 566 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் 60,000 குடிமக்கள் இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

11 மாதங்களில் சில ஹிஸ்பொல்லா தலைவர்களைக் கொலை செய்திருக்கிறது இஸ்ரேல். தெற்கு லெபனானில் தாக்குதல் நடைபெறுவதற்கான பதற்றம் தொடர்ந்து நிலவிவருகிறது.

காஸா மீது தாக்குதல்:

ஹமாஸ் மற்றும் ஹிஸ்பொல்லா அமைப்புகள் இஸ்ரேலை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் உதவினாலும் ஹமாஸ் சன்னி முஸ்லீம் அமைப்பாகும். ஹிஸ்பொல்லாவில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் இருக்கின்றனர். இதனால் இந்த இரண்டு அமைப்புகளைச் சிறந்த கூட்டாளிகளாகக் கருதிவிட முடியாது.

இரண்டு நாட்களுக்கு முன்னள் நடந்த பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு இப்போதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் போரின் புதிய கட்டத்தில் இருப்பதாக அறிவித்தனர்.

பேஜர் வெடிப்பு சம்பவத்துக்குப் பழிவாங்கல் நடவடிக்கையாகப் போர் நடைபெறும் என எச்சரித்திருக்கிறது ஹிஸ்பொல்லா.

கடந்த 11 மாதங்களில் இல்லாத தீவிர ஏவுகணை தாக்குதலை லெபனான் எல்லையில் நடத்தியிருக்கிறது இஸ்ரேல்.

Pager explosions - Lebanon - லெபனான்

சிரியா ஆதரவைக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லா உடனான இஸ்ரேலின் பகை மத்திய கிழக்கை அமைதியிலிருந்து வெகு தொலைவுக்குக் கொண்டுச் செல்லும் அபாயம் உச்சத்தில் இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் இஸ்ரேலும் ஹிஸ்பொல்லாவும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அழைப்புவிடுத்திருக்கின்றன.

Lebanon பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடிப்பு; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி; அச்சத்தில் லெபனான் மக்கள்
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.