அஸ்வின், பந்த், கில்.. 3 பேரால் சேப்பாக்கம் மைதானத்திற்கு முதல் முறையாக கிடைத்த பெருமை..
Tamil Minutes September 22, 2024 12:48 AM

சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானம் கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பதற்கு மிகச்சிறந்த மைதானம் என பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் மட்டும் இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் நடந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வமாக அதனை உற்று கவனித்து ஒவ்வொரு ரன்னையும் பெரிய அளவில் கொண்டாடவும் செய்வார்கள்.

இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடந்தாலே தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு கூட மிக பெரிய ஒரு திருவிழா போல தான் இருக்கும். ஆனால் அதே வேளையில் சேப்பாக்கம் மைதானம் என வந்து விட்டாலே பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டு வருகிறது.

டி20, ஐபிஎல் போட்டிகளில் கூட பந்து வீச்சுக்கு சேப்பாக்கம் மைதானம் சாதகமாக இருக்கும் சூழலில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதி வரும் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்திய பேட்ஸ்மேன்களும் இங்கே மிக நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்து வரும் சூழலில் தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு தற்போது அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்களை எடுத்திருந்தது. இதில் மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து அசத்தி இருந்தார்.

ஜடேஜா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் அரைச் சதமடித்து அசத்தி இருந்த சூழலில், வங்கதேச அணி 149 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. தொடர்ந்து 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோர் சதமடித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தனர்.

இதனால், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேரும் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 515 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி, 3 ஆம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது.

கைவசம் 6 விக்கெட்டுகள் இருக்க, இன்னும் 357 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. ஆனாலும், அதிரடியாக ஆடி வங்கதேச அணி வீரர்கள் ரன் சேர்த்து வருவதால் 4 வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில் தான், சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக நடந்த ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்க போகிறோம். அதாவது சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 3 இந்திய வீரர்கள் சதமடித்த நிகழ்வு தற்போது தான் முதல் முறையாக நடந்துள்ளது.

முதல் இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வினும், இரண்டாவது இன்னிங்சில் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.