PM Modi In US: இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 297 பொருட்களை திருப்பி கொடுத்த அமெரிக்கா - தாயகம் கொண்டு வரும் பிரதமர் மோடி
குலசேகரன் முனிரத்தினம் September 22, 2024 02:44 PM

PM Modi In US: கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வருகையின் போது, அமெரிக்கா 105 பழங்கால பொருட்களை திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு அமைச்சகம் அறிக்கை:

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த சூழலில், பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட, 297 பழங்காலப் பொருட்களை அமெரிக்கா அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.  

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெருக்கமான இருதரப்பு உறவுகளை வைத்தும், அதிக கலாச்சார புரிதலை வளர்ப்பதற்கும், அமெரிக்க வெளியுறவுத்துறையின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் துறையும் ஜூலை 2024 இல் கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பெருமிதம்:

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “297 விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்களை இந்தியாவுக்குத் திருப்பித் தருவதை உறுதி செய்ததற்காக அதிபர் பைடனுக்கும் அமெரிக்க அரசுக்கும் மிகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் . இது கலாச்சார தொடர்பை ஆழமாக்குதல் மற்றும் கலாசார சொத்துக்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துதலுக்கான நடவடிக்கை” எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பும் முக்கிய தொல்பொருட்கள்:

  • 10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய இந்தியாவைச் சேர்ந்த மணற்கற்களல் செய்யப்பட்ட அப்சரா
  • 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய இந்தியாவைச் சேர்ந்த வெண்கலத்தில் ஜெயின் தீர்த்தங்கர்.
  • 3-4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த டெரகோட்டா குவளை.
  • 1 ஆம் நூற்றாண்டு BCE-1 ஆம் நூற்றாண்டு CE க்கு சொந்தமான தென்னிந்தியாவைச் சேர்ந்த கல் சிற்பம்.
  • 17-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவின் வெண்கலத்தில் விநாயகர்
  • 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட இந்தியாவை சேர்ந்த மணற்கற்களில் நிற்கும் புத்தர்
  • 17-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிழக்கு இந்தியாவின் வெண்கலத்தில் விஷ்ணு பகவான்
  • 2000-1800 BCE க்கு சொந்தமான வட இந்தியாவில் இருந்து செப்பினாலானமானுட உருவம்
  • 17-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவின் வெண்கல கிருஷ்ணர்
  • 13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவில் இருந்து கிரானைட்டால் செய்யப்பட்ட கார்த்திகேய பகவான்

பழங்காலச் சின்னங்கள் கிமு 2000 முதல் கிபி 1900 வரையிலான 4000 ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்தவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தோற்றம் பெற்றவை. பெரும்பாலான பழங்கால பொருட்கள் கிழக்கு இந்தியாவில் இருந்து டெரகோட்டாவாலான கலைப்பொருட்கள் ஆகும், மற்றவை கல், உலோகம், மரம் மற்றும் தந்தத்தால் ஆன நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சொந்தமானவை ஆகும்.

இந்தியா - அமெரிக்கா உறவு:

2016 ஆம் ஆண்டு முதல், கடத்தப்பட்ட அல்லது திருடப்பட்ட பழங்காலப் பொருட்களை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்க அரசாங்கம் வசதி செய்துள்ளது. ஜூன் 2016 இல் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின் போது பத்து பழங்காலப் பொருட்களளும்,  2021 செப்டம்பர் பயணத்தின் போது 157 தொல்பொருட்களும்,  கடந்த ஆண்டு ஜூன் மாத பயணத்தின் போது 105 தொல்பொருட்களும் திருப்பிக் கொடுக்கப்பட்டன. 2016 முதல் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய கலாச்சார கலைப்பொருட்களின் மொத்த எண்ணிக்கை 578. எந்தவொரு நாட்டாலும் இந்தியாவுக்குத் திருப்பியளிக்கப்பட்ட கலாச்சாரக் கலைப்பொருட்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் இதுவாகும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.