"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
சுதர்சன் September 22, 2024 06:44 PM

பெரும் பாரம்பரியத்தை கொண்ட திருப்பதி லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது, பூதாகரமான சர்ச்சை வெடித்துள்ளது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என சாடியிருந்தார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியான ஆய்வில் லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

திருப்பதி லட்டு விவகாரம்: குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ( CALF ) ஆய்வில் லட்டில் கலப்படம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி லட்டின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் இதற்கு பிராயச்சித்தமாக 11 நாள்களுக்கு விரதம் இருக்க போவதாக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "வெங்கடாஜலபதியே, எங்களை மன்னியுங்கள்!

கடந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் புனித திருமலை லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கொடிய அநீதிக்குப் பிராயச்சித்தமாக, செப்டம்பர் 22, 2024 முதல் 11 நாள் தீக்ஷையை (விரதம்) மேற்கொள்கிறேன். தர்மத்தை மீட்டெடுத்து, திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியின் புனிதத்தைக் காப்போம்" என பதிவிட்டுள்ளார். 

ஜெகன் மோகன் விளக்கம்: இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன், "இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்கான டெண்டர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் விடப்படுகிறது.

யாருக்கு விட வேண்டும் யாருக்கு விடக் கூடாது என்ற தகுதி அளவுகோல் பல ஆண்டுகளாக மாறவில்லை. NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை சப்ளையர்கள் வழங்க வேண்டும். நெய்யிலிருந்து மாதிரிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேகரிக்கிறது. தர சான்றிதழ் பெற்ற பொருள்களை வைத்து மட்டுமே லட்டு செய்யப்படுகிறது. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது" என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.