முதல்வரின் இனவாதக் கருத்து மலிவானது - ஆளுநர் பதிலடி!
Seithipunal Tamil October 19, 2024 05:48 AM

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்விழாவில் பங்கேற்ற நிலையில்,  "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரிகளை விடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

மேலும், இதற்க்கு தமிழக ஆளுநர் தான் காரணம் என்று நேரடியாகவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் கண்டன்னத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், முதல்வர் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். #பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு  அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.