வீட்டின் அருகே பட்டாசு தயாரித்தவர் கைது; வெள்ளைத் திரி வைத்திருந்தவர் கைது!
Dhinasari Tamil October 21, 2024 06:48 AM
Sakthi Paramasivan.k வீட்டின் அருகே பட்டாசு தயாரித்தவர் கைது

வெம்பக்கோட்டை அருகே வீட்டின் அருகே பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் கீழச் செல்லையாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(31) என்பவர் வீட்டின் அருகே 60 சாட் வெடிக்கான குழாய்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளைத் திரி வைத்திருந்தவர் கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வெள்ளைத்திரிகளை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் தா.கோட்டையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தவிட்டுராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுக்கான வெள்ளைத் திரி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத் தகராறு; 4 பெண் குழந்தைகளுக்கு அரளி விதை கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

விருதுநகர் அருகே அரளி விதைகளை 4 பெண் குழந்தைகளுக்கு கொடுத்து தானும் உண்ட தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜமீன் சல்வார்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி கடல்மணி(29). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு அடிக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே, மனமுடைந்த கடல் மணி, வீட்டில் இருந்த ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஆவுடையாபுரம் இரயில்வே கேட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லாத இடத்தில் குழந்தைகளுக்கு அரளி விதையை கொடுத்ததோடு, தானும் அதை உண்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் குழந்தைகள் மயக்கமடைந்தனர்.

இந்நிலையில், அவர் வீட்டில் இல்லாததை அறிந்த அவரது சகோதரர் ஈஸ்வரன், கடல்மணியை செல்போனில் அழைத்துள்ளார். அவரிடம் நடந்தவற்றை கடல்மணி கூறியுள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த ஈஸ்வரன் 5 பேரையும் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கடல்மணியை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறா. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.