TVK : தவெக மாநில மாநாடு: காரில் சென்ற திருச்சி இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட இருவர் விபத்தில் பலி!
Vikatan October 27, 2024 09:48 PM

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி, நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்தார். இந்நிலையில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பகுதியில் இன்று பிரமாண்டமாக நடத்தி வருகிறார்.

இன்று மாலை 3 மணியளவில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. வி.சாலை பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு நேற்று முதலே ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்தவண்ணம் உள்ளனர்.

சீனிவாசன்

இந்த சூழலில், மாநாடு நடைபெறும் இடத்துக்கு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைரணி செயலாளரும், வழக்கறிஞருமான சீனிவாசன், கலை உள்ளிட்ட 5 பேரோடு பயணம் மேற்கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே அவர்கள் சென்ற கார் சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைரணி செயலாளர் சீனிவாசனும், துணைத் தலைவர் கலை என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கார் வேகமாக சென்ற நிலையில் கார் சக்கரம் கழன்று இந்த கோர விபத்து நடைபெற்றதாகச் சொல்லப்படுக்கிறது. அதோடு, அதில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.