TVK Maanadu: ஹே! விஜய் பேச்சை ரசித்துக் கேட்ட மலேசிய அமைச்சர் - வீடியோவை பாருங்க
சுகுமாறன் October 28, 2024 12:14 PM

Vijay TVK Maanadu: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது. பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் தவிர்த்து மற்ற விவகாரங்களில் பெரியளவில் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

விஜய் பேச்சை ரசித்துக் கேட்ட மலேசிய அமைச்சர்:

இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று அவரது ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் மற்ற அரசியல் கட்சியினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். த.வெ.க.வின் கொள்கைகள், செயல்திட்டங்களை கூறிய விஜய், தான் அரசியலுக்கு வருவதன் காரணம்? தன்னுடைய அரசியல் எதிரி யார்? தன்னுடைய நிலைப்பாடு என்ன? என்று விளக்கமாக கூறினார்.

பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எதிராக தான் அரசியலை முன்னெடுக்கப் போவதாக கூறியிருப்பதுடன் பல கருத்துக்களையும் கூறினார். நடிகர் விஜய்யின் இந்த பேச்சை மலேசிய நாட்டின் தமிழ் எம்.பி.யும், மலேசிய பிரதம மந்திரியின் துறையான சட்டத்துறையின் துணை அமைச்சரான குலசேகரன் ரசித்து கேட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் பேசும் “நல்ல முடிவுகள் தரும் நல்ல திட்டங்களை தீட்ட வேண்டும். அதை அமல்படுத்த வேண்டும். அதுவே மக்களிடம் போய் சேரனும். போய் சேந்துச்சானு பாத்துகிட்டே இருக்கனும்.

சோறு சாப்பிட்டாதன் பசியாறும். சோறுங்குற வார்த்தையை சொல்றதால பசி ஆறாது. மக்களுக்காக நாம கொண்டு வர்ற ப்ளான் எல்லாம் ப்ராக்டிக்கலா ஒர்க் அவுட் ஆகுற ப்ளானா இருக்கனும். சும்மா உதார் விட்ற ப்ளான்ஸ் எல்லாம் இருக்கவே கூடாது.

மீன் பிடிச்சு கொடுக்குறது தப்பு. மீன் பிடிக்க கத்துக்கொடுக்கனும் அதுதான் சரினு அப்படினு சொல்லிட்டு சிலர் சுத்துவாங்க. ஆனா நாங்க அப்படி இல்ல. கான்செப்டே வேற. பக்கா ப்ராக்டிக்கல். முடிஞ்சவங்க மீன் பிடிக்க கத்துக்கிட்டு வாழட்டும். முடியாதவங்களுக்கு நாம மீன்பிடிச்சு வாழ வைப்போம்” என்று பேசுவார். விஜய்யின் இந்த பேச்சு முடிந்தவுடன் மலேசிய அமைச்சர் குலசேகரன் ஹே என்ற சத்தத்துடன் தனது கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் ஒவ்வொரு கருத்தையும் அவர் ரசித்து கேட்டு ஆமோதிப்பது போல சைகை காட்டினார். விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.