31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Top Tamil News November 10, 2024 11:48 AM

தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன என்று தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று (சனிக்கிழமை) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பச் சேவைகள், துணிமணி மற்றும் ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நேற்று தொடங்கப்பட்டன. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிம்மதியாகத் தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், கடந்த மூன்றாண்டுகளாக ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகி வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலம், 2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களைத் தருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, அரசுச் செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, செந்தில் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன், செயல் இயக்குனர் சினேகா கலந்துகொண்டனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.