நவம்பர் 15ஆம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நிலையம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முனனெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த மாதம் பெய்த மழையின்போது, சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் வைத்து மழைநீர் உடனடியாக வெளியேற்றப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது,” என்றார் மேயர் பிரியா.