ஈராக் நாட்டில் கடந்த மாதம் பெண்களின் திருமண வயதை குறைக்கும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய சட்டத்தில் பெண்களின் திருமண வயது என்பது 9 ஆகவும், ஆண்களின் திருமண வயது என்பது 15 ஆகவும் குறைக்கப்படும். இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது இந்த மசோதாவின் படி புதிய சட்ட திருத்தம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சட்டத்தை ஈராக் பாராளுமன்றத்தில் ஷியா இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியினர் கொண்டுவர அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஈராக் நாட்டில் இதுவரை பெண்களுக்கான அதிகாரப்பூர்வ திருமண வயது 18 ஆக இருக்கும் நிலையில் இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதோடு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்று பலரும் அஞ்சுகிறார்கள். மேலும் இதற்கு எதிராக ஈராக் நாட்டில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.