12 Years Of Thuppakki : 2012 தீபாவளி பாக்ஸ் ஆபிஸை அலறவிட்ட விஜய்...12 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் துப்பாக்கி
ராகேஷ் தாரா November 13, 2024 02:44 PM

துப்பாக்கி 

இன்று அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு கரியரை மாற்றிய படமாக அமைந்துள்ளது. அதேபோல் விஜயின் கரியரை மாற்றிய படம்தான் துப்பாக்கி. ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான துப்பாக்கி திரைப்படம் 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. சுமார் ரூ 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ 129 கோடி வரை வசூலித்து விஜயின் மார்கெட்டை விரிவுபடுத்தியது.  

12 ஆண்டுகள் கடந்த துப்பாக்கி

ராணுவ வீரனாக விஜயை ரசிகர்களுக்கு புதுமையான ஒரு லுக்கில் விஜயை காட்டினார் ஏ.ஆர் முருகதாஸ். பாட்டு காமெடி என தொடங்கும் படம் எதிர்பார்க்காத திடீர் திருப்பத்துடன் சூடுபிக்கும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என யூகித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் செம மாஸான ட்விஸ்ட் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை திரைக்கதையில் ஒரு சின்ன குறை கூட சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமான ஒரு திரைக்கதையை அமைத்தார் ஏ.ஆர் முருகதாஸ்.  இடையிடையில் விஜய் காஜல் அகர்வால் ரொமான்ஸ் காட்சிகள் எக்ஸ்ட்ராவாக இல்லாமல் கதையுடன் இணைந்து அமைந்தது இன்னொரு சிறப்பு. ஜெயராம் , சத்யன் போன்ற நடிகர்களின் காமெடிகள் வர்க் அவுட் ஆகின.

ஒரு படத்திற்கு நாயகன் அமைபது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் வில்லன் அமைவது. அஜித் நடித்துவந்த பில்லா 2 படத்தில் வில்லனாக நடித்து வந்தார் வித்யுத் ஜம்வால். அவரை அப்படியே விஜய் படத்திற்கு தூக்கி வந்தார் முருகதாஸ். பேச்சு கம்மி வீச்சு அதிகம் மாதிரி ஒரு கூலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஹீரோவைவிட ஒரு படி ஸ்டெப் முன்பு யோசிப்பது. பறந்து பறந்து அடிப்பது என விஜய்க்கு டஃப் கொடுத்த ஆன்ஸ்கிரீன் வில்லன் வித்யுத் ஜம்வால்.

ஹாரிஸ் ஜெயராஜ்

துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் ஹாரிஸ் ஜெயராஜ் .விஜய் நடித்த நண்பன் படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். துப்பாக்கி படத்தில் இரண்டாவது முறையாக இவர்கள் கூட்டணி இணைந்தது. குட்டி புலி கூட்டம் என இண்ட்ரோ சாங் தொடங்கி க்ளைமேக்ஸில் போய் வரவா என எமோஷனலான பாடல் வரை முழு ஆல்பம் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். விஜயின் குரலில் அமைந்த கூகுள் கூகுள் பாடல் காய்ச்சலைப் போல் ரசிகர்களை ஆக்கிரமித்தது. பாடல்கள் தவிர்த்து டைட்டில் கார்டில் தொடங்கி படம் முழுவதும் பின்னணி இசைக்கு என ஒரு தனி ஃப்ளேவரை படத்திற்கு கொடுத்தார் ஹாரிஸ். 

அஜித்திற்கு மங்காத்தா படம் என்றால் விஜய்க்கு துப்பாக்கி திரைப்படம் தான் ஒரு பெஞ்ச்மார்க் திரைப்படமாக இருக்கும் .

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.