Martin : லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Vikatan November 14, 2024 05:48 PM
சென்னை மற்றும் கோவையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் வெள்ளை கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்டின் இல்லத்திற்கு இன்று காலை இரண்டு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல 3 கார்களில் மார்டின் குழும அலுவலகங்களுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கும் சோதனை நடத்தி வருகின்றனர். மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 3 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

மார்ட்டின்

கடந்த ஆண்டு அமலாக்கத்துறை மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில் சொத்துகள் முடக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அமலாக்கத்துறையினர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல சென்னையில் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின், துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ட்டின்

கோவை மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் , ஹோமியோபதி மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்துக்கு செல்ல முடியாமல் வாயிலிலேயே நின்று வருகின்றனர். ஹோமியோபதி கல்லூரி வாயிலில் மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கும் பின்னணியும்

கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 7 கோடி 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அமலாக்கத்துறையும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. பிறகு இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத்துறையும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.