TASMAC : 2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை!
Vikatan November 14, 2024 05:48 PM
டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் முறையாக கணினி மூலம் பில்லிங் செய்யப்பட்டு, அதன் ஒவ்வொரு தரவுகளையும் கணினி மூலம் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கை.

மது விற்பனையை கணினி மூலம் கணக்கில் கொண்டு வரும்போது மது விற்பனை குறித்த தகவல்களையும் தரவுகளையும் அதிகாரபூர்வமாக அறிய முடியும். அதன் மூலம் எவ்வளவு விற்பனை நடக்கிறது, ஒரு நாளைக்குத் தனி நபர் எவ்வளவு மதுவை வாங்குகிறார், அதை எப்படி கட்டுப்படுத்துவது, சரியான விலையில் மது விற்பனை குறித்த நிறைய விஷயங்களை கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் கொண்டுவரலாம்.

சமீபத்தில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் கூடுதலாக விலை வசூலிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, அது குறித்து பேசியிருந்த தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, "தவறாகக் கணக்குக் காட்டிவிட்டு, டாஸ்மாக் வருமானம் வேறு யாருக்கோ தவறான முறையில் செல்லும் வாய்ப்புகளும்... டாஸ்மாக் விற்பனை குறைந்த இந்த விவகாரத்தில் இருப்பதாக சந்தேகமிருக்கிறது.

டாஸ்மாக்

இப்படி முறையான கணக்குகள் இல்லாமலும், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவும் டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டாஸ்மாக் கணக்குகளை முறைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

தற்போது, மது விற்பனையில் டிஜிட்டல் முறையில் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் செய்யும் முறை இன்று முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கி வரும் 220 டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வருகிறது. மேலும், QR கோடு மூலமும் பணப் பரிமாற்றம் செய்து மதுவை விற்பனை செய்யும் நடைமுறையும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்திட்டம் முதற்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.