இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்திருந்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாம் போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. 1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி நேற்று செஞ்சுரியனில் நடந்திருந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 219 ரன்களை அடித்திருந்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக இளம் வீரரான திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்களை அடித்திருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் திலக் வர்மா அடிக்கும் முதல் சதம் இது. திலக் வர்மா எதிர்கொண்ட முதல் பந்தை டாட் ஆக்கியிருந்தார். அந்த முதல் பந்தில் மட்டும்தான் அமைதி வழி. அதன்பிறகு எல்லாமே அதிரடிதான். தென்னாப்பிரிக்காவின் அத்தனை பௌலர்களையும் துவம்சம் செய்தவர் 8 பவுண்டரிகளையும் 7 சிக்சர்களையும் அடித்திருந்தார்.
முதல் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார். தொடர்ந்து இந்தப் போட்டியிலும் அவர் டக் அவுட்டே ஆகியிருந்தார். திலக் வர்மாவை தவிர்த்தி இந்தியா சார்பில் அபிஷேக் சர்மா நன்றாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். இவர்களின் பங்களிப்பால் இந்திய அணி 219 ரன்களை எட்டியது.
இந்திய அணிதென்னாப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் டார்கெட். தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே தென்னாப்பிரிக்கா எடுத்திருந்தது. இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் க்ளாசெனும் யான்செனும் போட்டியை விறுவிறுப்பாக்கினர். கடந்த போட்டியில் வருண் சக்கரவர்த்தி க்ளாசெனின் விக்கெட்டை சொல்லியடித்து தூக்கியிருந்தார்.
இந்தப் போட்டியில் க்ளாசென் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்திருந்தார். யான்செனும் அதிரடியில் பட்டையைக் கிளப்பினார். 17 பந்துகளில் 54 ரன்களை அடித்திருந்தார். ஹர்திக் பாண்ட்யாவின் 19 வது ஓவரில் மட்டும் 26 ரன்களை அடித்திருந்தார்.
ஆனால், இவர்களின் இன்னிங்ஸை அர்ஷ்தீப் சிங் சரியான நேரத்தில் முடித்து வைத்தார். இதனால் தென்னாப்பிரிக்காவால் இலக்கை நெருங்கி வர முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா இப்போது முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...