வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமா? - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
Seithipunal Tamil November 15, 2024 05:48 AM

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் துறையின் இணைய தளம் (www.elections.tn.gov.in) வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதில், திருத்தம் ஏதாவது மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தால், தமிழகம் முழுவதும் இந்தமாதம் நான்கு நாட்கள் நடக்கும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;- "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 01.01.2025-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, 2025-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வருகின்ற 16.11.2024, 17.11.2024, மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய நான்கு நாட்களில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம் நாட்களையும் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.