சுரேஷ் சங்கையா: "தன் உடல் பாதிப்பை வெளிப்படுத்தாமல், கலகலப்பாக இருப்பார்..." - நெகிழும் தயாரிப்பாளர்
Vikatan November 16, 2024 07:48 PM

எளிய மக்களின் வாழ்வியல் கதைகளான 'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்தியசோதனை' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா, நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 41.

பிரேம்ஜியை வைத்து 'சத்திய சோதனை' என்ற படத்தை அடுத்து யோகி பாபுவை வைத்து 'கிணத்த காணோம்', செந்தில் நடிப்பில் ஒரு படம் ஆகியவற்றை இயக்கி வந்தார். அந்த இரண்டு படங்களுக்குமே மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சுரேஷ் சங்கையா மறைந்திருக்கிறார். அவரது நினைவுகள் குறித்து 'கிணத்த காணோம்' தயாரிப்பாளரான எஸ்.ஆர். ரமேஷ் பாபு, கனத்த இதயத்துடன் பகிர்கிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு படப்பிடிப்பில்..

''சுரேஷ் சங்கையாவின் படங்களைப் போலவே, அவரும் எளிமையானவர். கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மனிதர்களின் இயல்பான மனதை, மண் மணம் மாறாமல் கலகலப்பாகச் சொல்லும் அவரது படத்தைப் போலத்தான் அவரும் இருப்பார்.

யோகிபாபு பட பூஜையில்..

யாரிடமும் எளிதாகப் பழகிவிடுவார். எங்களிடம் அவர் 'கிணத்த காணோம்' படத்தின் கதையைச் சொன்ன விதமும், கதையும் ரொம்பவே பிடித்துவிட்டது. தனிப்பட்ட கஷ்டங்களையும், உடல் பாதிப்பையும் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் நகைச்சுவையும், மகிழ்ச்சியுமாக இருப்பார். அவர் கதை சொல்லும்போது பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தோம். யோகி பாபு ஹீரோ, லவ்லின் விஜி சந்திரசேகர் ஹீரோயின். மொத்த படத்தையும் முடித்துவிட்டோம்.

ரொம்ப சென்ஸிபிளானவர். வசனங்களை ரொம்பவும் தீவிரமாக யோசித்து, எழுதுவார். பக்காவாகத் திட்டமிட்டு, படப்பிடிப்பை நடத்தக்கூடியவர். ஒரு படைப்பாளியாக ரொம்பவும் பிடிவாதக்காரர். நினைத்த சீனை, காட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். தனது படைப்புகளில் காட்டும் அக்கறையைத் தனது உடன் நலனிலும் கொஞ்சம் அவர் காட்டியிருக்கலாம். அவர் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறுவது இது முதல் முறை அல்ல.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ரமேஷ்பாபு

அவரது உதவி இயக்குநர்கள், நண்பர்கள், கூடவே இருப்பவர்கள் அவரது உடல் நலன் பாதிப்பை அறிவார்கள். அவர்கள் அனைவருமே அவரிடம் 'உடல் நலனையும் கவனித்துக் கொள்' என்று பலமுறை சொல்லியிருக்கிறார்கள். படைப்புகளில் அவர் காட்டிய பிடிவாத குணத்தை அவரது உடல் நலனிலும் காட்டியிருந்தால், சோகம் நிகழ்ந்திருக்காது. தமிழ் சினிமா ஒரு நல்ல இயக்குநரைச் சீக்கிரமே இழந்துவிட்டது'' என்கிறார் ரமேஷ்பாபு.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.