பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்தில் பூமியை முழுவதுமாக சுற்றி வந்து விடும். அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும். சில நேரங்களில், சிறு புள்ளி வெளிச்சம் போல் வானத்தில் செல்வதை, பூமியிலிருந்து பலர் பார்த்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு , இந்த விண்வெளி நிலையமானது சென்னையில் தெரிந்ததாகவும் செய்திகள் வந்ததை பார்க்க முடிந்தது.
விண்வெளியில் , சர்வதேச விண்வெளி நிலையத்தின் பணிகளானது 1998 ஆம் ஆண்டு தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு முதல், விண்வெளி வீரர்கள் இயக்க தொடங்கியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இத்திட்ட பணியில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை பங்கு வைக்கின்றன. இதன் எடையானது, சுமார் 4.3 லட்சம் கிலோ எடை கொண்டது என கூறப்படுகிறது. இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
இந்த தருணத்தில் , சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சர்வீஸ் மாட்யூல் என்கிற பிரிவை பிரிக்கும் பிரிவில், வாயு காற்று கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரியில் இருந்து மேலும் அதிகரித்து வருவதாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கசிவானது , 2019 ஆண்டே கண்டறியப்பட்டதாகவும், ஆனால் சமீபத்தில் தீவிரமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது , கசிவானது இரண்டு மடங்காகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கசிவு நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1.7கிலோகிராம் வரையிலான காற்று கசிவானது அதிகரித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்டதில், இது அதிகபட்ச அளவாகும். இது, அங்கிருக்கும் விஞ்ஞானிகள் மீதான பாதுகாப்பின் மீதும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, கசிவு விகிதத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர். NASA தலைமையகத்தில் ISS திட்டத்தின் இயக்குனர் ராபின் தெரிவிக்கையில், சமீபத்தில் கசிவு விகிதத்தை மூன்றில் ஒரு பங்கை குறைத்துள்ளதாக தெரிவித்தார் என்றார்.
ஆனால் , தற்போது மீண்டும் கசிவு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் "கசிவுக்கான காரணங்கள் மற்றும் அவை விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரச்னையை விரைவில் சரி செய்யவில்லை எனில்,மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளதாவது, பிரச்னையானது கட்டுபாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுப்பாடுகள் இருந்தாலும், நிலைமை மேலும் தீவிரமடைவதற்கு முன் மூல காரணத்தை கண்டறிந்து, இரு விண்வெளி ஏஜென்சிகளும் இணைந்து தீர்வு காண தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.இந்த தருணத்தில், ISS இல் உள்ள விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்புடன் செயல்படுவது முக்கியமாகும் என கருத்துகள் எழுந்து வருகின்றன. சர்வதேச விண்வெளி மையத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்சும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.