அளவுக்கதிமாக குடித்ததால் விமானப் பணியாளர்கள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து நியூயார்க் செல்லத் தயாராக இருந்த டெல்டா விமானத்தின் பணியாளர்களுக்கு சுவாசப் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது ஒரு பெண் பணியாளர் அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு அதிகமாக குடித்து இருந்தது தெரியவந்தது. மற்றொரு சக ஆண் பணியாளரும் குறிப்பிட்ட அளவை விட அதிகமாகக் குடித்திருந்ததும் தெரிய வந்தது.விமானத்தில் பணிபுரிய அனுமதிக்காமல் இருவரும் இறக்கிவிடப்பட்டனர்
மேலும் பெண் பணியாளருக்கு 2 ஆயிரம் டாலர்களும், ஆண் அதிகாரிக்கு 290 டாலர்களும் அபராதமும் விதித்தனர் டச்சு அதிகாரிகள். இருவரையும் இறக்கிவிட்ட பிறகு பயணிகளுடன் நியூயார்க் நகருக்கு வழக்கமான சேவையை தொடர்ந்தது டெல்டா நிறுவனம்.
இரண்டு பணியாளர்களும் விமான சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான பைலட்களும், சேவைப் பணியாளர்களும் விமானத்தில் ஏறுவதற்கு முன் 10 மணி நேரம் குடிக்காமல் இருக்க வேண்டும் என்பது டச்சு (நெதர்லாந்து) நாட்டின் விதியாக உள்ளது. அமெரிக்காவில் இது 8 மணி நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பணியாளர்களே குடித்துப் பிடிபட்டுக் கொண்டது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.