தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணி... காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு!
Dinamaalai December 04, 2024 12:48 AM

தமிழகத்தில் ஃபெங்கல் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு  ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதில் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் வரலாறு காணாத பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சூழ்ந்த வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஃபெஞ்சல் சூறாவளியின் பேரழிவு செய்தி அறிந்து கவலை அடைந்தேன்.

இந்த சோகத்தின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், உடைமை இழந்தவர்களுடன் துணை நிற்பேன். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.