விழுப்புரத்தில் பரபரப்பு... அமைச்சர் மீது சேற்றைவாரி இறைத்த பொதுமக்கள்!
Dinamaalai December 04, 2024 12:48 AM


 
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் மழைநீர் வெள்ள பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  
விழுப்புரத்தில் சாத்தனூர் ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டிய நிலையில் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதனால், அரசூர், இருவேல்பட்டு  உட்பட சுற்றுவட்டார  கிராமங்களில் மழை வெள்ளநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு மேடான பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில்  இன்று காலை முதலே, மழைநீரில் தங்கள் உடமைகளை இழந்து வாடும் கிராம மக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


கனமழை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது அமைச்சர் மீது சிலர் சேற்றை வாரி இறைத்தனர். இதனால்  அமைச்சர் பொன்முடி மற்றும்அருகில் இருந்தவர்கள் சட்டைகளில் சேற்று கறை படிந்தது.
ஆய்வு பணிகளுக்காக சென்ற அமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து உடனடியாக அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு சென்றார்.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.