பாஜக தலைவர் அண்ணாமலை எல்லா பத்திரிகையாளர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற கொடுமை குறித்து மாணவி வெளியே தெரிவித்ததற்கு அவருக்கு முதலில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதற்கு சமூக நலத்துறை, காவல்துறை இணைந்து செயல்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு முறையாக தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுவது இந்த ஆட்சியில் முறையாக நடக்கிறது. ஒரு சில வழக்குகளில் காவல்துறையின் கவனக்குறைவினால் தவறு நடந்தால் கூட அரசியல் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் போது அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது. வளர் இளம் பெண்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டுள்ளது
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சமூக நலத்துறை, காவல்துறை, கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு செய்து வருகிறது. இதனால் தைரியமாக பெண்கள் புகார் அளிக்க வருகின்றனர். முதல்வர் மீது நம்பிக்கை இருப்பதால்தான் பெண்கள் இன்று புகார் அளிக்க முன் வருகின்றனர். அதிமுக ஆட்சியில் எவ்வளவு குற்ற செயல்கள். பொள்ளாச்சி குற்றச்செயல் பொல்லாத ஆட்சிக்கு சாட்சி. கட்சிக்காரர்களை பாதுகாப்பதற்காக எடப்பாடி ஆட்சியில் வழக்கு பதிவு செய்வது கிடையாது. இப்போது நடக்கும் ஆட்சி எல்லா புகாருக்கும் முறைப்படி விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கி கொடுக்கப்படுகிறது. அதிமுகவும் பாஜகவும் வெறும் வாயை மென்று கொண்டிருந்தனர், இன்று இந்த வழக்கை கொண்டு மெல்வதற்கு ஒன்று கிடைத்துவிட்டது என்று மெல்கின்றனர்.
தளபதியின் ஆட்சியை எடப்பாடி கேள்வி கேட்கிறார்... அவரது ஆட்சியில் நடந்த கொடுமைகளை கேள்வி கேட்க நமக்கு நேரம் பத்தாது, பாஜக தலைவர் எல்லா பத்திரிகையாளர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார். பாரு... பாரு .. என்று கயிற்றால் அடித்துக்கொண்டு அண்ணாமலை வித்தை காட்டுகிறார். அவருக்கு பதவி பறிபோகிறது என்கின்றனர் அதனால் தான் இப்படி செய்கிறார்? அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை, தற்போது ஆட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி. எதிர்க்கட்சியாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டும். பாஜக மாநில தலைவராக இருந்தாலும் சரி மக்களிடம் பொய்யான நம்பிக்கை ஊட்டி விடலாம் என்று நினைக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுககாரர் அல்ல, ஆனால் அனைவரும் அவர் திமுகவினர் என்று பொய் பரப்புரை செய்கின்றனர்” என்றார்.